கீதாவின் விடுமுறை நாட்களை ஒட்டி வரும்படியாகத் தான் குமரேசனும் லீவு எடுப்பது வழக்கம்.
அவன் வந்து விட்டால் போதும். கீதா ஒரேடியாகக் கொட்டம் அடிப்பாள். அண்ணனை அழைத்துக் கொண்டு கடற்கரை எங்கும் சுற்றுவதும், வள்ளி குகை மீது ஏறுவதும் அமலபுரத்துக்குக் கடலோரமாக நடந்தே சென்று மீன் வாங்குவதும், நாவல் பழமரச்சோலைக்குச் செல்வதுமாக ஒருநாள் ஒரு வினாடியாகக் கழிந்து போகும்.
அதுவும் இப்போது கீதா கல்லூரி மாணவி. அந்தக் கதைகள் வேறு அண்ணனிடம் அளக்க வேண்டியது நிறைய இருந்தன. ஆனால்...
விடுமுறைக்கு வந்த அண்ணன் தனியாக வரவில்லையே. அவனோடு அவனுடைய நண்பன் பிரபுவும் சேர்ந்து வந்து விட்டானே. சேர்ந்து வந்தான் என்றால் சேர்ந்தே தான்...